முரளியின் மகன் என்பதை தாண்டி தனக்கென ஒரு இடம் பிடித்துவிட்டார் அதர்வா. பாலாவின் பட்டறையில் பதம்பார்க்கப்பட்டு ஈட்டியென தனக்கான இலக்கை நோக்கி பாயும் இவரின் 'கணித' அவதாரம் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. ஒரு முழுநீள Social Thriller ஆக வந்திருக்கும் கணிதன் பற்றிய விமர்சனம் இதோ.
கதை:
நாம் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதை நாம் படித்த படிப்பே நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த படிப்பே இல்லையென்றால் நம் வாழ்க்கையே இல்லை என யோசிக்கும் போது எப்படியிருக்கும். அப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் கதைக்களம் தான் இந்த கணிதன்.ஒரு சின்ன பிரபலமடையாத தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் அதர்வாவிற்கு ஒரு மிகப்பெரிய பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் எப்படியாவது ரிப்போர்ட்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியம். இதனிடையில் இவர் பணிபுரியும் அந்த தொலைக்காட்சியின் CEOவின் மகள் கேத்ரின் மீது காதல்.பின் தனது லட்சிய தொலைக்காட்சியில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவரின் கனவை சுக்கு நூறாக உடைக்கிறது இவரின் மேல் போடப்படும் வங்கி மோசடி வழக்கு. கல்வி கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிய குற்றத்திற்காக அதர்வா மட்டுமில்லாமல் இவருடன் சேர்த்து 5 பேரை கைது செய்கிறது காவல்துறை.ஆனால் இந்த குற்றத்திற்கு காரணம் போலி சான்றிதழ்கள் வழங்கிய ஒரு கும்பல்தான். தன் வாழ்க்கையே இல்லை என்றாக்கிய இந்த கும்பலை எப்படி கணித்து பலி வாங்குகிறான் இந்த கணிதன் என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்:அதர்வா, துடிப்பான ரிப்போர்ட்டர் கதாப்பாத்திரத்தில் நச் என பொருந்தி, காதலில் குழைவதில் இருந்து எதிரிகளை கால்பந்தாடுவது வரை அனைத்திலும் வெரி குட் வாங்குகிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் ரசிகர்களின் ஒட்டுமொத்த கைத்தட்டல்களையும் அள்ளிக்கொண்டு போகிறார்.கேத்ரினுக்கு வழக்கமான அதே தமிழ் நாயகி பாத்திரம் தான் இருந்தாலும் இவரின் க்யூட் நடிப்பை ரசிக்காமல் இருக்க முடியாது. கருணாகரன் & சுந்தர் ராமுவின் காமெடிக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் மனதில் நிற்கும் ஒரு கதாப்பாத்திரம் இவர்களுக்கு. தருன் அரோரா வில்லன் கதாப்பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி பவுண்டரிகள் விளாசுகிறார். பாக்கியராஜ் கௌரவ வேடத்தில் தோன்றி கவனம் ஈர்க்கிறார்.படத்தின் ஒட்டுமொத்த பலமே படத்தின் வேகம்தான் குறிப்பாக மசாலா படங்களுக்கு தேவையான இடைவேளை, ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் பாராட்டத்தக்கவை. படத்தின் வில்லனுக்கும், ஹீரோவுக்குமான ஆடுபுலி ஆட்டம் போன்ற அப்ளாஸ் அள்ளும் காட்சிகளுக்காக இயக்குனர் T.N சந்தோஷ் அவர்களை பாராட்டலாம்.ஆனால் படத்தின் மையப்பிரச்சனையில் இருந்து விலகிய படத்தின் முடிவு அதிர்ச்சிதான் அளிக்கிறது. அதேபோல் யோசிக்காமலேயே கவனத்தில் படும் லாஜிக் மீறல்கள் கண்ணை உறுத்துகிறது.அதேப்போல் பல பார்த்து பழகிய க்ளீஷே காட்சிகள் தேவைதானா என படக்குழு யோசிக்க வேண்டும். ட்ரம்ஸ் சிவமணியின் பின்னணி பலம் என்றால் சில பாடல்கள் படத்தின் வேகத்தடையே. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவை கண்ணை மூடிக்கொண்டு கூட ரசிக்கலாம்.
க்ளாப்ஸ்:
விறுவிறுப்பான திரைக்கதை, அனைத்து நடிகர்களின் பங்களிப்பு, சீட்டின் நுனிக்கு ரசிகர்களை அழைத்து செல்லும் பல காட்சிகள்.
பல்ப்ஸ்:
எளிதாக கண்டறியும் லாஜிக் மீறல்கள், பார்த்து பழகிய க்ளீஷே காட்சிகள், பாடல்கள் இடம் பெற்ற விதம்.மொத்தத்தில் இந்த கணிதன் லாஜிக்கை மறந்து மேஜிக்கை ரசிக்கும் ரசிகர்களுக்கான ஆக்ஷன் த்ரில்லர் விருந்து.
ரேட்டிங்: 2.75/ 5
0 comments:
Post a Comment