திருவனந்தபுரம்: தன்னைக் கட்டித் தழுவிய ரசிகரை பாதுகாவலர்கள் தள்ளிவிட, அதனைக் கண்ட விக்ரம் அனைவரும் நெகிழும்படி அந்த ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார். மலையாளத்தில் புகழ்பெற்ற ஏசியாநெட் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. 
இதில் மலையாள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மேடைக்கு கீழே அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர், விக்ரமைப் பார்த்தவுடன் பாய்ந்து அவரைத் தழுவிக் கொண்டார். இந்த செயலைப் பார்த்த பாதுகாவலர்கள், அந்த ரசிகரைத் தள்ளிவிட அவர் கீழே விழுந்து விட்டார். 
இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைய அதன்பின் அங்கு நடந்த செயல் பார்ப்பவர்களின் மனதை உருக்கியது. அந்த ரசிகரைத் தள்ளி விட்டதை பார்த்துக் கோபமடைந்த விக்ரம், பாதுகாவலர்களை விலக்கித் தள்ளி, அந்த ரசிகரை அருகில் அழைத்து அவரது விருப்பத்தைக் கேட்டார். 
விக்ரமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அந்த ரசிகர் கூற, அவரின் விருப்பத்தை நிறைவேற்ற செல்பி எடுக்கும் நோக்கில் செல்போனை முன்னே கொண்டுவந்தார். ஆனால் அந்த ரசிகர் செல்பி வேண்டாம் என்று மறுக்க, அருகில் இருந்தவரிடம் செல்போனைக் கொடுத்து விக்ரம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 
புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அந்த ரசிகர் விக்ரமின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட, புகைப்படம் முதல் முத்தம் வரை அனைத்தையும் இன்முகத்துடன் விக்ரம் ஏற்றுக் கொண்டார். விக்ரமின் இந்த செயல் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அங்கிருந்த அனைவர் மனதையும் நெகிழச் செய்திருக்கிறது.

0 comments:
Post a Comment