ஒரு பிரபல தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கியவர் ஆனால், இன்று இவரின் சின்ன பேட்டியாவது கிடைக்குமா என பல தொலைக்காட்சிகள் ஏங்குகிறது. பல ரசிகர்களுக்கும் சிறு கலைஞர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும், தன் உழைப்பாலே உயர்ந்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
1985 ஆண்டு பிப்ரவரி 17 அன்று இவரை பெற்றெடுத்த தாய் தந்தையினருக்கு கூட அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை இவர் தங்களின் பொக்கிஷம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்று. கல்லூரி காலத்தில் கலை நிகழ்ச்சிகளில் மூலம் இவரின் திறமையை கண்ட நண்பர்கள் தான் இவரை “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் தேர்விற்கு அனுப்பினர் பிறகென்ன “கலக்கியது நான்தான்” என பிரகடனம் செய்தார்.
தொடர்ந்து அந்த தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் தன்னுள் இருந்த திறமைகளை கட்டவிழ்த்து விட்டார். தொகுப்பாளராக இருந்த பொழுதே பல குறும்படங்களில் நடித்து தனது இலக்கை நோக்கி பயணிக்க சிறகுகளை சீர் செய்து கொண்டிருந்தார்.2012 நம்மில் பலருக்கு முக்கியமான ஆண்டாக இல்லாமல் போகலாம் ஆனால் தமிழ் சினிமாவிற்கு அது மிக முக்கியமான ஆண்டு! அவ்வருடம் தான் நாயகனாக “மெரினா” மூலம் அறிமுகமானார் சிவா. ”ஆங்கருக்கு எதுக்குபா ஹீரோ வேஷம்” ஏளனமாக பேசியவர்கள் பலர். 
ஆனால் தொகுப்பாளராக இருந்த போது இருந்த ரசிகர்களில் ஒருவரை கூட அவர் இழக்கவில்லை. அதன் பின் தொட்ட படங்கள் எல்லாம் பட்டைய கிளப்ப அப்போது அனைவருக்கும் புரிந்தது சிவாவின் மிடாஸ் டச்.நடித்த சில படங்களிலேயே ரசிகர் வட்டம் பெரிதாகியது, மார்க்கெட் வலுத்தது. ”குருட்டு அதிர்ஷ்டம்” என விமர்சித்தார்கள், பலர் பொறாமையில் பசும்பாலாக பொங்கினார்கள், ”நான் தான் ஏற்றி விட்டேன்” என பலர் பீற்றிக்கொண்டார்கள்.
ஆனால் இவர் தன்னை தானே செதுக்கியவர். பல ஏமாற்றங்களை ஏற்றங்களுக்காக தாங்கிக்கொண்டவர். இப்போது இவருக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியின் வேர்கள் இவரின் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி. ரசிகர்களின் கரகோஷங்கள் தான் கலைஞர்களின் மிகப்பெரிய சொத்து என்றால் இவர்தான் இளம் கலைஞரில் குபேரன்.இவரின் பிறந்தநாளான இன்று இவரை வாழ்த்துவதில் சினி உலகம் பெருமகிழ்ச்சி அடைகிறது!

0 comments:
Post a Comment