தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஜீவா வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தனது 25வது படத்தில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்திய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவுடன் இணைந்து போக்கிரி ராஜாவாக களம் இறங்கியுள்ளார். களத்தில் இந்த ராஜாவின் போக்கிரித்தனம் எவ்வாறு உள்ளது என பார்ப்போம்.
கதைக்களம்:
நாம் இதுவரை எத்தனையோ அதீத சக்தி பெற்ற மனிதர்கள் கதைகளை படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இப்படி தூக்கம் வருவதற்கு முன் வரும் கொட்டாவியை ஒரு சக்தியாக மையப்படுத்தி எதிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆம் நாயகன் ஜீவாவிற்கு தான் இந்த சக்தி. ஆரம்பத்தில் இது இவருக்கு பிரச்சனையாகவே உள்ளது. இதனால் தன் காதலி, சில வேலைகள் என தன் வாழ்வின் முக்கியமான விஷயங்களை இழக்க நேர்கிறது. பின் ஹன்சிகாவுடன் இணைந்து ஒரு பொதுசேவையில் ஈடுபடும் போது ஒரு பக்கம் சிபிராஜின் பகையை சம்பாதித்து மறுபக்கம் ஹன்சிகாவின் காதலை பெறுகிறார். இச்சம்பவத்தில் தன்னை அறியாமல் சிபிராஜை பொது இடத்தில் அவமானப்படுத்த பகை முற்றுகிறது. இதை தொடர்ந்து தன் அசாத்திய கொட்டாவியை கொண்டு வில்லனை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்ஜீவாவிற்கு ’நச்’ என பொருந்தும் குறும்புத்தனமான கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். அதிலும் கொட்டாவி வரும் காட்சிகளில் இவரின் முகபாவனை ‘குட்’. வழக்கமாக ஹன்சிகாவை எதற்கெல்லாம் ரசிப்போமோ அது எல்லாம் இப்படத்தில் இருக்கிறது. சிபிராஜ் வில்லனாக நடித்துள்ளார், ஆனால் இவரின் கதாப்பாத்திரத்தில் தான் வில்லத்தனமே இல்லை இருந்தாலும் அவரின் பங்கு முக்கியமானது. யோகி பாபு , முனிஷ்காந்த், மனோபாலாவின் காமெடிகள் பல இடங்களில் ”சபாஷ்” எனவும் சில இடங்களில் “உஷ்ஷ்ஷ்” எனவும் சொல்ல வைக்கிறது.மொத்த படத்தையும் காமெடியை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளார். குறிப்பாக ஜீவா யோகி பாபுவின் காம்பினேஷன் காமெடிகளும், சிபி கண் தெரியாமல் போகும்போதும், பிறகு கண் தெரிந்த பின் நடக்கும் போதும் ரகளைகள் “சூப்பர்”. ஆனால் என்னதான் பல இடங்களில் ரசிக்கும் படி இருந்தாலும் ஒரு படமாக பார்க்கும் போது “கலக்கப்போவது யார்” போலவே காட்சியளிக்கிறது. அதேபோல் இது ஒரு அதீத சக்தி கொண்ட மனிதரின் கதை என்றால் திரைக்கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அதில் கோட்டை விடுகிறான் இந்த போக்கிரி ராஜா. இந்த வித்தியாசமான “புது” முயற்சி மட்டுமே பாராட்டுக்குரியது மற்றபடி அதே ”பழைய” மசாலா பஞ்சாங்கம்தான். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்கிறது. இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம், ‘பப்லி பப்லி’ பாடல் கண்களுக்கு விருந்து, பின்னணி இசைக் காட்சிகளுக்கு பலம் சேர்கிறது. படம் கொட்டாவியை மையப்படுத்தி எடுத்தாலும் ரசிகர்களை பல இடத்தில் கொட்டாவி விடவைக்காமல் இப்படத்தை கையாண்டு இருந்தால், படம் இந்த வாரத்திற்கான சரியான விருந்தாக இருந்திருக்கும்.
க்ளாப்ஸ்:
வித்தியாசமான கதை, நகைச்சுவை காட்சிகள், நடிகர்களின் பங்களிப்பு.
பல்ப்ஸ்:
சுவாரஸ்யமற்ற திரைக்கதை, நகைச்சுவையை மட்டுமே நம்பியது, படத்தில் தேவையற்ற சில திணிப்புகள்.மொத்தத்தில் ஜீவாவிற்கு போக்கிரி ராஜா – ஆறுதல் பரிசு.
ரேட்டிங்: 2.5 / 5
0 comments:
Post a Comment