நட்பதிகாரம் 79 திரை விமர்சனம்


2016 ஒரு Comeback ஆண்டு என்றே கூறவேண்டும். நடிகர் மாதவன், பிரசாந்த், இயக்குனர் சசி இவர்கள் வரிசையில் இப்போது இயக்குனர் ரவிச்சந்திரன். “கண்ணெதிரே தோன்றினால்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி வெற்றி கண்டவர். நட்பிற்கு அப்படத்தில் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவதோடு (அம்சங்களோடு) இக்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாக்கிய படம்தான் நட்பதிகாரம் 79.

கதைக்களம்:

ராஜ் பரத், தேஜஸ்வினி மற்றும் அம்சத், ரேஷ்மி மேனன் என இரு காதல் ஜோடிகள். இவ்விரு ஜோடிகளும் ஒரே இடத்தில் சந்திக்க நேர்கிறது. பின் ரேஷ்மிக்கு ஏற்படும் பிரச்சனையில் ராஜ் பரத் உதவி செய்ய இவர்களின் நட்புமலர்கிறது. நட்பு, காதல் இந்த இரண்டு உறவுகளில் நம்பிக்கையின்மையோ அல்லது தவறான புரிதலோ ஏற்பட்டால் உறவில் விரிசலே மிஞ்சும். இது போன்ற ஒரு கசப்பான சூழ்நிலையால் இவ்விரு ஜோடிகளின் காதலும் நட்பும் முடிவிற்கு வருகிறது. பின் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என முயற்சிக்கும் ராஜ் பரத் மற்றும் ரேஷ்மி மேனனுக்கு வெற்றி கிடைக்கிறதா என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்ராஜ் பரத், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் வில்லன் “தம்பா”வாக மிரட்டியவர். இப்படத்தின் மூலம் வில்லன்டூ ஹீரோ பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார், வாழ்த்துக்கள் ராஜ். ஹீரோ என்ற இமேஜுக்கு ஏற்ற உடற்கட்டு, காட்சிகளுக்கு ஏற்ற முகபாவனை என “குட்” வாங்குகிறார். வல்லினம் படத்தில் நகுலின் நண்பனாக வந்த அம்சத் இதில் ஒரு குறும்புத்தனமான பாத்திரத்தில் சரியாக பொறுந்தியுள்ளார். ரேஷ்மி மேனன், “சோ க்யூட், சோ ஸ்வீட்” என்ற வார்த்தைகளுக்கு இப்படத்தில் உருவம் கொடுத்துள்ளார். இவரின் எமோஷன் காட்சிகளில் நம் கண்களையும் ஈரமாக்குகிறார். இரு நாயகிகள் இருந்தாலும் இவருக்கே நடிக்க அதிக வாய்ப்பு, அதை நிறைவாக செய்துள்ளார். தேஜஸ்வினி தெலுங்கில் பல படங்களில் நடித்தாலும் தமிழில் இதுவே முதல் படம். சிறு சிறு குறும்பான முகபாவனைகள் கவனம் ஈர்க்கிறது, கவர்ச்சியிலும் தாராளம் காட்டியுள்ளார். வரும் கொஞ்ச காட்சிகளிலும் நமது மனதில் நீங்காத இடம் பிடித்துக் கொள்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்களை தவிர சுப்புபஞ்சு, வினோதினி, விக்னேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர்.தீபக் நிலம்புரின் இசைதான் படத்திற்கு பாதி பலம், பாடல்களும் சரி பின்னணியும் சரி ஒரு கை பார்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு ஃப்ரேமையும் மெறுகேற்றுகிறது. குறிப்பாக பாடல்களின் காட்சி அமைப்புகளுக்காகவே இவரை பாராட்டியே ஆக வேண்டும். சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.ஹீரோ - வில்லன் சண்டை சச்சரவு என பல மசாலா படங்களுக்கு இடையில் கண்டிப்பாக இது ஒரு மாற்று. படத்தின்வசனம், காட்சியமைப்பு, உறவுகளுக்குள் ஏற்படும் உணர்ச்சி போராட்டம் என அனைத்திலும் “Welcome Back” ரவிச்சந்திரன் சார் என சொல்லவைக்கிறார். ஆனால் படத்தின் முதல்பாதி கடிகாரத்தை அடிக்கடி பார்க்க வைக்கிறது. பாடல்கள் நன்றாகத்தான் உள்ளது என்றாலும் படத்தின் வேகத்தை அது குறைக்கலாமா? கடிதம் எழுதி விட்டு வீட்டை விட்டு செல்லும் மகள், ”நான் முக்கியமா இல்ல ஃப்ரெண்ட்ஸ் முக்கியமா” என கேட்கும் காதலி, விமான நிலையம் அல்லது மருத்துவமனையில் க்ளைமேக்ஸ் வைப்பது இது போன்ற தமிழ் படங்களுக்கான க்ளீஷேக்களை தவிர்த்திருக்கலாம்.

க்ளாப்ஸ்:

நடிகர்களின் பங்களிப்பு, இயக்குனர் ரவிச்சந்திரனின் ட்ரேட் மார்க் காட்சிகள், தீபக்கின் இசை, ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு.

பல்ப்ஸ்:

திரைக்கதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். பார்த்து பழகிய க்ளீஷேக்களை தவிர்த்திருக்கலாம். 2 மணிநேர படம்தான் என்றாலும் கொஞ்சம் பெரிய படம் போலவே தோன்றுகிறது.மொத்தத்தில் நட்பதிகாரம்79 ஆழமான நட்பையும் அழகான காதலையும் உறவுகளின் உணர்வுகளையும் அப்படியே கண்முன் நிறுத்துகிறது.

ரேட்டிங்: 2.75/5

Share on Google Plus

About Nanjil

0 comments:

Post a Comment