தென்னிந்திய சினிமா தற்போது மெல்ல பாலிவுட்டை அச்சுறுத்தி வருகின்றது. இதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டது எந்திரன் படம் தான். இதை தொடர்ந்து பாகுபலி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் வசூலில் பிரமிக்க வைத்தது.அந்த வகையில் பவன் கல்யாண் இந்த பெயருக்கே, பிரமாண்ட ஓப்பனிங் காத்திருக்கும். கப்பர் சிங் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் கப்பர் சிங், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.
கதைக்களம்:
தெலுங்கு படத்தில் என்ன கதை இருக்க போகிறது. ஊரை ஆட்டிப்படைக்கும் வில்லன், அவனை எப்படி ஹீரோ பழிவாங்குகிறார் என்பது தான் தொன்று தொட்டு 90 வருடமாக இருக்கும் ஒரே கதை.அதே தான் இந்த சர்தார் கப்பர் சிங்கும். ரதன்பூர் சமஸ்தானத்தில் விவசாய நிலங்களை அழித்து வரும் கொடூர வில்லன் பைரோவ் சிங். இவன் ஆட்டத்தை அடக்க, ஒரு தைரியமான போலிஸ்காரர் வேண்டும் என ரதன்பூர் மன்னர் மேலிடத்தில் கேட்கிறார்.பிறகு என்ன, அந்த ஊருக்கு சர்தார் பெட்டியை கட்ட, அந்த ஊரில் நடக்கும் அனைத்து அடிதடிகளையும், விவசாய நிலங்கள் அழித்தல் ஆகியவற்றை எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
பவன் கல்யாண் திரைத்துறைக்கு வந்து சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை 20+ படங்கள் தான் நடித்திருப்பார். அதில் பாதி படம் தோல்வி தான், ஆனால், இன்று ரெக்கார்ட் ஓப்பனிங் அப்படி ஒரு மாஸ் குறையாத மகாராஜா இந்த பவன். தன் பேவரட் கிண்டல், நடனம், வசனம் என ஒன் மேன் ஷோ தான்.பொதுவாக தெலுங்கு படங்களில் ஹீரோயின்கள் அழகு சாதன பொருளாக மட்டுமே பயன்படுவார்கள். காஜல் அழகாக இருக்கிறார் என்பதை தாண்டி படத்தில் பல காட்சிகளில் வருகிறார். குறிப்பாக படத்தின் முதல் பாதியில் தான் இளவரசி என்பதை பவனிடம் மறைத்து அவர் செய்யும் கலாட்டா, அது தெரியாமல் பவன் செய்யும் குறும்பு என கலகலப்பிற்கு பஞ்சமில்லை.ஆனால், ஊரே நடுங்கும் பைரோவ் சிங் குரல் மட்டும் தான் கம்பீரமாக உள்ளது. அதுவும் டப்பிங் வாய்ஸ் போல, வருகிறார். கப்பர் சிங்கிடம் அவமானப்படுகிறார், வருகிறார், போகிறார் இதற்கு மட்டும் தான் பயன்பட்டுள்ளார். மேலும், பவன் கல்யாண் போல் ஒரு ஸ்கீரின் ப்ரசன்ஸ் கொண்ட நபருக்கு இப்படியா ஒரு வில்லனை தேர்ந்தெடுப்பது?படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை பிரம்மானந்தா, அலி மற்றும் முந்தைய பாகத்தில் உள்ள அடியாட்களை வைத்து செய்யும் காமெடி என இந்த படத்திலும் அதே பாணியில் வருவது ரசிக்க வைக்கின்றது. இவை அனைத்தையும் விட மிகவும் ரசித்த காமெடி சண்டைக்காட்சிகள் தான்.தெலுங்கு படம் என்று மனதை திடப்படுத்தி சென்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ப்ரண்ட்ஸ் பட சார்லி போல் ஆகிவிட வேண்டும் போல. ‘ஆமா இவர் தான் இவருக்கு இதான் வேலை’ என்பது போல் பவன் வில்லன்களை இப்படியா பந்தாடுவது. 100க்கு அதிகமானோர் வந்தாலும், ஒரு அடிக்கூட வாங்காமல் அடித்து துவம்சம் செய்கிறார். குறிப்பு: 100 பேர் கையிலும் துப்பாக்கி இருக்கும்.அதிலும் இடைவேளை முன்பு ஒரு சண்டைக்காட்சி வருகின்றது, நோ கமெண்ட்ஸ். தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ஓப்பனிங் பாடல் மற்றும் பவன்-காஜலின் டூயட் தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசை வழக்கம் போல் இறைச்சல் தான். காதுகளுக்கு இன்சுரன்ஸ் செய்து விட்டு செல்லுங்கள்.
க்ளாப்ஸ்:
பவன் கல்யாண், பவன் கல்யாண், பவன் கல்யாண்....முன்பே சொன்னது போல் ஒன் மேன் ஷோ தான். ஒரு முழு நீள கமர்ஷியல் படத்திற்கு பொருந்தும் பக்காவான ஹீரோ.வில்சனின் ஒளிப்பதிவு ரதன்பூர் என்ற வட இந்தியாவிற்கான கலர். அதே நேரத்தில் பிரமாண்ட அரண்மனையில் அழகு என கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.படத்தின் முதல் பாதி திரைக்கதை வேகமாக செல்கின்றது. கிளைமேக்ஸில் வில்லன் கும்பலிடம் பவன் நடனமாடி கலாட்டா செய்யும் காட்சி சூப்பர்.
பல்ப்ஸ்:
போதும் இனிமேலும் இதுப்போன்ற சண்டைக்காட்சிகளை பார்க்க எங்களுக்கு தைரியமில்லை டோலிவுட் இயக்குனர்களே.படத்தின் இரண்டாம் பாதியில் ஏன் இத்தனை நீள.........ம்.ஒரே மாதிரியான கதைக்களம், ஹீரோவை மட்டும் நம்பி கதையில் கோட்டை விட்டது.மொத்தத்தில் கப்பர் சிங் அளவிற்கு சர்தார் கவருவாரா என்றால், லேது லேது.
ரேட்டிங்: 2.5/5
0 comments:
Post a Comment